திருச்சியில் சென்சார் கதவை உடைத்து 2.5 கிலோ தங்கத்தை திருடிய டிஜிட்டல் கொள்ளையர்கள்
திருச்சியில் ஒப்பந்ததாரர் வீட்டின் சென்சார் பொருத்தப்பட்ட கதவை உடைத்து 2.5 கிலோ நகை, வைர நெக்லஸ், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த மர்ம கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தேவேந்திரன். ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியரான இவரும். இவரது சகோதரர் நேதாஜியும் இணைந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் அரசின் ஒப்பந்த சாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரர்கள் இருவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில், நேதாஜியின் குடும்ப விழா ஒன்றிற்காக வீட்டில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர். கதவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முன்பக்க சென்சார் கதவு உடைக்கப்பட்டதும் வீட்டின் உரிமையாளரான தேவேந்திரனின் செல்போனிற்கு எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட தேவேந்திரன் உடனடியாக திரு்சிச மாவட்ட காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 2.5 கிலோ (300 சவரன்) தங்க நகை, வைர நெக்லஸ், பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை உறுதிப்படுத்தினர். வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.