இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. தினமும் குறைந்தது 50 நபர்களுக்கு மிகாமல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ஐ எட்டியிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கும் நிலையில் 50 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் நேற்று கண்டறியப்பட்டது. அதில் வேதனை தரக்கூடிய செய்தியாக ஒரு வயது குழந்தை ஒன்றும் அடங்யுள்ளது. அக்குழந்தையின் தந்தைக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குழந்தைக்கும் உடல்நலம் பாதிக்கப்படவே மருத்துவ பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து குழந்தை தற்போது தனிமை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வயதே நிரம்பிய குழந்தை என்பதால் அதன் தாயும் அருகில் இருந்து கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைக்கு நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது