கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது நான்காம் கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில எல்லைகள் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அரசிடம் முறையான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பிற மாநிலங்களுக்கு செல்லவும் அங்கிருந்து வருகை தரவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பலர் அனுமதி இன்றி செல்ல முயன்று கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் தென்காசி அருகே கேரள எல்லையில் லாரியின் அடியில் பதுங்கி வாலிபர் ஒருவர் கேரளாவுக்கு செல்ல முயன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. சாலை வழியாகவோ ரயில் தண்டவாளம் மூலமாகவோ அனுமதியின்றி யாரும் வருகிறார்களா? என்பதை கண்காணிக்க இருமாநில காவல்துறையினரும் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே செங்கோட்டை அருகே இருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் வழக்கம் போல தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதிக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது அங்கு நள்ளிரவில் கேரளாவிற்கு சவுக்கு கம்புகள் ஏற்றிய லாரி ஒன்று வந்திருக்கிறது. அதை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தபோது லாரியின் அடியில் இருக்கும் மாற்று டயர் பகுதியில் சந்தேகம் கொள்ளும்படி ஏதோ தென்பட்டுள்ளது.

இதையடுத்து அதை அதிகாரிகள் கவனித்த போது வாலிபர் ஒருவர் அங்கே அமர்ந்து இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை வெளியே வர வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(27) என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது கேரளாவில் இருக்கும் தனது மனைவிக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் குழந்தையைப் பார்க்கும் ஆசையில் டிரைவருக்கு தெரியாமல் செங்கோட்டை அருகே லாரியின் அடியில் ஏறி பதுங்கி வந்ததாகவும் கூறினார். அவரை மீட்ட போலீசார் புனலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் தனிமை வார்டில் அனுமதித்துள்ளனர். பிறந்த குழந்தையைப் பார்க்கும் ஆவலில் லாரிக்கு அடியில் ஓட்டுநருக்கே தெரியாமல் வாலிபர் மறைந்து சென்ற சம்பவம் போலீசாருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.