தென்காசியில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள்
கலப்பு திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோர், உறவினர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் வினித். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் படேல் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி வினித்தும், கிருத்திகாவும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் திருமணம் செய்து அதனை பதிவு செய்து கொண்டனர். ஆனால், இவர்கள் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு சம்மதம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் காவல் நிலையத்தில் வினித், கிருத்திகா தம்பதி ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.
ஆனால், புகார் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், முதல்வரின் தனிபிரிவுக்கும் வினித் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரிக்கவே, புகாரை திரும்பப் பெறுமாறு வினித்திற்கு காவல் துறையினர் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வினித், கிருத்திகா, வினித்தின் பெற்றோர் சென்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த கிருத்திகாவின் பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் தாக்கிவிட்டு கிருத்திகாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில், கிருத்திகாவை அவரது உறவினர்கள் தூக்கிச் செல்லும் காட்சிகள் மட்டும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.