நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு என்கிற துரைசாமி(70). இவரது மனைவி களஞ்சியம் அம்மாள்(67). அய்யாக்கண்ணு அங்குள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 25 ம் தேதி அய்யாக்கண்ணு வேலை முடித்து இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது தனது மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தென்காசி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலையில் அய்யாக்கண்ணு உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி களஞ்சியம் அம்மாள் கதறி அழுதுள்ளார். மிகவும் சோகமாக காணப்பட்ட அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மாரடைப்பு வந்த சிறிது நேரத்தில் களஞ்சியம் அம்மாள் இறந்து விட்டார்.இதனால் உறவினர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்து போனது சாவிலும் இணை பிரியா தம்பதி என்று அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியாக பேச வைத்தது.