அம்பன் புயல் பாதிப்பால் தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வெப்பசலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கடும்புயலான அம்பன் புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்க கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடல் மிக சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படும். மீனவர்கள் தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத் தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.