பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு 1 ரூபாய்! நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி வழங்கினால் ஒரு ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாநகராட்சி தரப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வழங்கினால் ஒரு பாட்டிலுக்கு 1 ரூபாய் வீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து வழங்கலாம். பொது இடங்களில் கிடக்கம் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து வந்து கொடுத்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வீதம் பெற்றுக்கொள்ளலாம்.
முதல் கட்டமாக இந்தத் திட்டம் சோதனை முறையில் செயல்பாட்டுக்கு வருகிறது. நெல்லை டவுண் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்து உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இது விரைவில் மாநகராட்சியின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நெல்லை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கவும் மறுசுழற்சி செய்யவும் உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தரவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே பாலித்தீன் பைகள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகளில் அவற்றை வழங்கவும் வைத்திருக்கவும் கூடாது என்று அறிவறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் அவற்றை பயன்படுத்துவதை ஓரளவுக்குத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் மூங்கில் தொழில் பாதிப்பு; கைவினை கலைஞர்கள் வேதனை