நெல்லை இளைஞர் கவின் ஆவணக்கொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டம் நடத்தினார். ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Thirumavalavan Protest Against DMK Government: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கவினும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் காதலித்து வந்தனர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவின் ஆணவப் படுகொலை
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரரின் சுர்ஜித் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர் கவினை வெட்டி படுகொலை செய்தார். சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர்.
சிபிசிஐடி போலீஸ் விசாரணை
கவினின் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். தனது மகனின் சாவுக்கு துணைபோன சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என கவினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களும் விசாரணையில் களமிறங்கினார்கள். காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி ஒப்படைத்த நிலையில், அவர்கள் கவின் கொலை நடந்த இடமான கே.டி.சி.நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் ஆய்வு செய்தனர்.
கவின் குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல்
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், கவினின் வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுத்தனர். தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் கவின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் அங்கு சென்று கவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு அரசு பதிலளிக்கவில்லை
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''கவினை பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். தனியொருவராக கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. கொலைக்கு பிறகு கவின் தாயாரை 3 மணி நேரம் காவல் நிலையத்தில் காக்க வைத்திருக்கிறார்கள். சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்துளோம். இந்த சட்டத்தை கொண்டு வரலாமா? என மாநில அரசுகளின் கருத்தை ஒன்றிய அரசு கேட்டபோது அதற்கு தமிழ்நாடு அரசு கூட பதிலளிக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது'' என்று தெரிவித்தார்.
திருமாவளவன் தலைமையில் போராட்டம்
இதன்பிறகு கவின் படுகொலையை கண்டித்து நெல்லை பாளையங்கோட்டையில் திருமாவளவன தலைமையில் 500க்கும் மேற்பட்ட விசிகவினர் போராட்டம் நடத்தினார்கள். ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கவின் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
