புதுச்சேரியில் மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிட்ட நபா் தொண்டையில் பரோட்டா சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரி கருவடிக்குப்பம், பாரதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் திருநெல்வேலியைச் சோ்ந்த சண்முகசுந்தரி என்பவரை திருணம் செய்து கொண்டார். சண்முக சுந்தரி தனது பெற்றோரை பார்ப்பதற்காக கடந்த வாரம் திருநெல்வேலி சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த புருஷோத்தமன் வரும் வழியில் பரோட்டா வங்கி வந்துள்ளார். வீட்டில் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டே மனைவியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென புருஷோத்தமன் தொண்டையில் பரோட்ட சிக்கிய நிலையில் மேற்கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. புருஷோத்தமன் பேசாததால் சண்முகசுந்தரி தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் போன் செய்துள்ளார். ஆனால், அழைப்பு ஏற்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த உறவினா்களுக்கு போன் செய்து சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

உறவினா்கள் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், புருஷோத்தமன் சாப்பிட்ட நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். திருமணமாகி 6 மாதங்களேயான புதுமாப்பிள்ளை தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.