நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை
திருநெல்வேலி மாவட்டத்தில் கந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்ட ரௌடி தீபக் ராஜாவின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான வாகைகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் தாம் சார்ந்த சமூக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். மேலும் மாற்று சமூக மக்களால் தன் சமூக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார். இதனால் பிற சமூக மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தீபக் ராஜா தனது காதலியுடன் கடந்த 20ம் தேதி பெருமாள்புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்திற்கு சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இச்சம்பவத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கனமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்குங்கள்; முதல்வருக்கு சபாநாயகர் கடிதம்
இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் தீபக் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினர்கள், அவர் சார்ந்த சமூக இளைஞர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் தீபக் ராஜா குடும்பத்தினருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் இன்று காலை 10.30 மணியளவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை பெற்றுக்கொள்ளும் போதே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதனால், சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு தீபக் ராஜாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழி நெடுகிலும் குவிக்கப்பட்டனர். மொத்தமாக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் உடல் பெறப்பட்டு 3 மணி நேரத்தை கடந்த நிலையிலும் ஊர்வலம் திருநெல்வேலியை தாண்டாத நிலையில் எந்நேரமும் கலவரம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர பாதுகாப்பில் அமைதி காத்து ஊர்வலத்துடன் சென்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சாதிய மோதல்கள் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தல் இருந்ததால் ஊர்வலம் முழுவதும் நேரலையாக பதிவு செய்யப்பட்டு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் சென்னையில் இருந்தபடியே இதனை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் புரட்டி எடுத்த இளைஞர்கள்
ஊர்வலம் ஒருவழியாக இளைஞரின் சொந்த ஊரான வாகைகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நெல்லை, தூத்துக்குடியை உள்ளடக்கிய தென் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சாதிய மோதல்கள் தொடர்ந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இதனால் கடுமையான பொருளாதார விரையம் ஏற்படுகிறது. எனவே தென்மாவட்டங்களில் சாதிய தலைவர்கள் அனைவரையும் காவல்துறை உயர் அதிகாரிகள் அழைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் மோதல்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.