உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை எடுத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தற்போது 3வது கட்டத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக கோவில்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் வழக்கம் போல பூஜைகள் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சில பணிகளை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் கோவில்களில் இருக்கும் அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு பணியாற்ற அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. எனினும் பக்தர்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- அனைத்து திருக்கோயில்களிலும் வெளித்துறை பணியாளர்கள் 33 சதவீத சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். உள் பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பணிக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்ற நபர்கள் அனுமதிக்கக்கூடாது. கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. அலுவலக வளாகத்தில் கை கழுவும் குழாய்கள், கை கழுவ பயன்படும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இவைத்தவிர அரசு அல்லது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றால் தெரிவிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.