மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் விரைவில் அழிக்கப்படவிருப்பதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”“திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சிங்கம்பட்டி வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் அமைந்துள்ளது. 8373 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள மாஞ்சோலை மலைப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து கடந்த 12.02.1929 அன்று 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்று மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (Bombay Burma Trading Corporation Limited - BBTC) நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை அமைத்தது.
காட்டு மாமரங்கள் மிகுந்திருந்த மாஞ்சோலை மலைப்பகுதியிலிருந்த மரங்களை அழித்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி மற்றும் மாஞ்சோலை என ஐந்து பகுதிகளாக தேயிலைத் தோட்டங்களை அமைத்தது பி.பி.டி.சி நிறுவனம். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பினில் உருவானவை மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள். தமிழ்த்தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக மிகக்குறைந்த கூலிக்குக் குருதியை வியர்வையாகச் சிந்திய உழைப்பின் ஈரம் மாஞ்சோலை தோட்டத்தின் ஒவ்வொரு தேயிலைச்செடியின் வேரிலும் நிரந்தரமாகத் தேங்கியுள்ளது.
1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரிமுறை ஒழிப்புச்சட்டத்தினைத் தொடர்ந்து 19.02.1952 அன்று சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் அரசின் சொத்தாக மாற்றப்பட்டது. ஆனால், பி.பி.டி.சி நிறுவனம் அரசின் அனுமதியைப்பெற்று மாஞ்சோலை மலைப்பகுதியின் குத்தகை ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டதோடு, தேயிலை உற்பத்தியைக் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தேயிலைத் தொழிலாளர்கள் கடந்த நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை மட்டுமே முழுமையாக நம்பி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 1988 ஆம் ஆண்டு மாஞ்சோலை வனப்பகுதியையும் சேர்த்து மேற்குத்தொடர்ச்சி மலையின் 895 ச.கி.மீ பகுதியை களக்காடு – முண்டன்துறை புலிகள் காப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரசின் அறிவிப்பினை எதிர்த்தும், மாஞ்சோலை மலைப்பகுதியைத் தங்களுக்குச் சொந்தமானதாக பட்டா வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் கூறி பி.பி.டி.சி நிறுவனம் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறைக்கும், அரசுக்கும் எதிராக அடுத்தடுத்து ஆறு வழக்குகளைத் தொடர்ந்தது. அவ்வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து வழக்குகளையும் 01.09.2017 அன்று தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பி.பி.டி.சி நிறுவனம் செய்த மேல்முறையீட்டு வழக்கினை 19.01.2018 அன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மாஞ்சோலை மலைப்பகுதி தனியார் நிலம் அல்ல தமிழர் நிலம் என்பதை உறுதி செய்தது. மேலும், 2028 ஆம் ஆண்டிற்கு முன்னதாக மாஞ்சோலை மலைப்பகுதியை விட்டு பி.பி.டி.சி நிறுவனம் வெளியேற வேண்டுமெனவும், மலைப்பகுதியை முன்புபோல் காடுகளாக மாற்றித்தரவும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 28.02.2018 அன்று மாஞ்சோலை மலைப்பகுதி உள்ளடங்கிய 57,000 ஏக்கர் பரப்பளவுகொண்ட சிங்கம்பட்டி வனப்பகுதியைக் காப்புக்காடாக (Reserve Forest) அறிவித்தது தமிழ்நாடு அரசு.
இதனால் பி.பி.டி.சி நிறுவனம் மாஞ்சோலை மலைப்பகுதியை விட்டு நடப்பு 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியேறத் திட்டமிட்டுள்ள நிலையில் அங்குப் பணிபுரியும் தேயிலைத் தொழிலாளர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பி.பி.டி.சி நிறுவனம் தேயிலை உற்பத்தியைக் குறைத்ததால் 5,000 தோட்டத்தொழிலாளர்கள் பணிபுரிந்த மாஞ்சோலை பகுதியில், தற்போது 2,000 தொழிலாளர்களே பணிபுரிந்துவருகிறார்கள்.
கடந்த நான்கு தலைமுறைகளாகக் கடும் உழைப்பினை ஈந்து மிகச் சுவையான தேயிலையை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் காரணமான தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும், அடிப்படை மனித தேவைகளான வீடு, குடிநீர், கழிப்பறை, மருத்துவம், சாலை, மின்சாரம், போக்குவரத்து, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தராமல் அம்மக்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடித்த பி.பி.டி.சி நிறுவனம், மாஞ்சோலையை விட்டு வெளியேறும் நிலையிலும் அவர்களுக்கு உரியப் பணப்பலன்களைக்கூட முறையாக வழங்க மறுத்து ஏமாற்றி வருகிறது.
1999ஆம் ஆண்டுவரை வெறும் 70 ரூபாய் தினக்கூலிக்கு அரும்பாடுபட்டு உழைத்த தேயிலைத்தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு முன்னெடுத்த உரிமைப் போராட்டத்தினை முடக்க அன்றைய திமுக அரசு 23.07.1999 அன்று, காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி அறவழியில் போராடிய மக்களை தாமிரபரணி ஆற்றில் தள்ளி, ஈவு இரக்கமின்றி 17 பேரை படுகொலை செய்தது. கீழ்வெண்மணி படுகொலைக்குப் பிறகு, உரிமைகேட்டு போராடிய தொழிலாளர்களைக் கொன்று குவித்த தமிழ்நாட்டின் மிகப்பெரிய படுகொலையான மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை வரலாற்றில் என்றும் மறையாத கொடும் வடுவானது.
உரிமைக்காக 17 பேர் உயிரீகம் செய்த பிறகும், இன்றும் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வு இன்றளவும் வறுமையில் உழலும் கொடுஞ்சூழலே நிலவுகிறது. தற்போது மேலும் ஒரு பேரிடியாக மாஞ்சோலையை விட்டு விரைவில் வெளியேறவுள்ள பி.பி.டி.சி நிறுவனம் இத்தனை ஆண்டுகாலம் உழைத்த தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி தேயிலைத் தோட்டங்களை முற்று முழுதாக அழிக்க முனைகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன் புலம்பெயர்ந்து வந்த அத்தொழிலாளர்கள் பலருக்கு சொந்த ஊர் எதுவென்றே தெரியாது. தோட்டத்தொழிலை தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத அம்மக்களுக்கு, வேறு காலநிலைகளில் பணிபுரிவதற்கு அவர்களின் உடல்நிலையும் ஒத்துழைப்பதில்லை. அதனால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
76,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் வெறும் 1000 ஏக்கரில் பயிரிடப்படும் தேயிலைத்தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உதகமண்டலம், வால்பாறை, மேகமலை, குன்னூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தேயிலைப் பயிரிடப்பட்டே வருகின்றன. மேலும், மலை வளத்தையும், வனப்பையும் பாதுகாப்பதில் மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மிகுந்த அக்கறைகொண்ட முன்னோடிகளாகவே உள்ளனர். சொகுசு விடுதிகள், தொழிற்சாலைகள், சுற்றுலா பயணிகள் கொட்டும் நெகிழி குப்பைகளால் மலைக்காடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி தேயிலைத்தோட்டங்களை அழிக்கத்துடிப்பது ஏன்? தேயிலைத்தோட்டங்களை அழித்து இயற்கை வளமிக்க மாஞ்சோலை மலைப்பகுதியை தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே, நெடுங்காலமாக இருளடைந்துள்ள மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும், உரிய ஊதியம், பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர், கழிப்பறை, மருத்துவம், மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.