Inter Caste Marriage: ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே தமிழகம் தான் - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கிய வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு ஆறு ஆண்கள் தூத்துக்குடி பேருரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசியல் கட்சி அலுவலகத்தில் சாதி வெறியர்கள் பட்டப்பகலில் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழக அளவில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சமூக விரோதிகளை அரசு, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு காவல்துறையின் பார்வையாளராக இருப்பதை அனுமதிக்க முடியாது
திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கடி ஜாதி வெறி படுகொலை நடைபெறுகிறது. ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது தமிழகத்திற்கு அவ பெயர். இது தமிழகத்திற்கு அழகு இல்லை. அரசு இந்த சம்பவத்தில் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் கட்சி மீதும் பலர் விமர்சனம் வைக்கிறார்கள். நாங்கள் யாரையும் கடத்தி சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. எங்களை நாடி வரும்போது நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்.
சட்டப்படி விரும்புவர்கள் திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. அரசியலமைப்பு சாசனம் அந்த உரிமையை வழங்கி உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதை எங்கள் கட்சி செய்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்களுக்கு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கும். பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த ஜோடிகளுக்கு வேலை, வீடு உள்ளிட்ட அடிப்படையை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு செய்யவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.
சில ஜாதி அமைப்புகள் தான் இதை ஊதி பெரிதாகின்றன. காதல் தம்பதிகளை, சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. சாதிய சகதியிலேயே ஊறி மக்கள் அழிய வேண்டுமா? ஆணவ படுகொலைகள் நடைபெற வேண்டுமா?
ஜாதி கொலைகளுக்கு சாதாரண மக்கள் காரணம் இல்லை. ஜாதி வெறியர்களும், கூலிப்படைகளும் தான் செய்கிறார்கள். கூலிப்படையை அழிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள ஜோடிகளின் எதிர்கால நலன் கேள்விக்குறியாகிறது. அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் என்பது சமூகத்தின் அடுத்த கட்டம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூலிப்படையை வைத்து இயக்குகிற கூட்டம் நிறைய இருக்கிறது. சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற சில தவறுகளுக்கு காவல்துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகளும் காரணம்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். அவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும். தற்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி அவர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு கூட போதுமானதாக இருக்காது. இதுகுறித்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களை சந்திக்க இருப்பதாகவும், அவர்களை அழைத்துக் கொண்டு முதல்வர் மு க ஸ்டாலினை சென்று பார்க்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.