தென்னிந்தியாவின் கடைசி ராஜாவான சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி மகாராஜா மரணமடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது சிங்கம்பட்டி. இங்கிருக்கும் சமாஸ்தானத்தின் பட்டம் கட்டிய மன்னராக விளங்கியவர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டம் வருவதற்கு முன்பே  பட்டம் சூட்டிய ராஜாக்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார். 3 வயதாக இருக்கும் போது இவரது தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா மரணமடையவே சமாஸ்தானத்தின் 31வது இராஜாவாக இவருக்கு மூடிசூடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு காலமானார். தமிழகத்தின் கடைசி இராஜாவான அவரது மறைவு நெல்லை மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.