தற்கொலை முயற்சியா..? இனி குண்டர் சட்டம் தான்.. ஆட்சியரின் அதிரடி முடிவு!!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்ய முயன்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களில் சிலர் தங்கள் குறைகளை தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கான தீர்வு ஏற்படவில்லை எனில் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொள்வதாக எச்சரிக்கை விடுகின்றனர்.
கடந்த 9 ம் தேதி நடந்த கூட்டத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (21 ) என்பவர் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்தார். அதே போல நேற்று மானூரைச் சேர்ந்த போதர் என்பவர் இட பிரச்சனை சம்பந்தமாக தீ குளிக்க முயற்சி செய்தார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்று தற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம் என்பதால் மாவட்ட ஆட்சியர் ஷில்பா கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அதன்படி இனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் உயிருக்கு ஆபத்தான பொருள்களை கொண்டு வருவது மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக மனு அளித்தாலே போதும், முறையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்க கூடாது என்று ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.