பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷாவை ஆகியோரின் சோலியை நீங்கள் முடிச்சுடுவீங்கன்னு நெனச்சேன், ஆனா ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே என முஸ்லீம் மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசுகையில்:- பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் இழிவுபடுத்துவதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு திருமணம் ஆனதை மறைத்தார் என்றும், பின்னர் அது ஒரு சர்ச்சை ஆன நிலையில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டார். இதுபோன்றவர்கள் பிரதமராக இருக்கின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

 

 

 

தொடர்ந்து பேசிய அவர் அமித் ஷாவை குறிப்பிட்டு அவரது சோலியை நீங்கள்லாம் முடிச்சுடுவீங்கன்னு நெனச்சேன், ஆனா ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே என்று, இஸ்லாமியர்களை கொலைக்காரர்கள் என்றும் கொலைக்காரர்களான நீங்கள் ஏன் இன்னும் அவர்களை கொலை செய்யாமல் இருக்கின்றீர்கள் என வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இவர் மீது போலீசார் வழக்கப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்நிலையில், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அவரது முகநூல் பக்கத்தில் "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் மாண்புமிகு பிரதமர் மற்றும்  உள்துறை அமைச்சர் இருவரையும் முஸ்லீம்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டுகிறார். மாநில டிஜிபி அவர்களிடம் புகார் செய்துள்ளேன். எதுவும் அசம்பாவிதம் நடக்கும் முன் தமிழக அரசு அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.