Asianet News TamilAsianet News Tamil

நாங்க சொல்ற வரைக்கும் பள்ளிகளை திறக்க கூடாது.. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை பெய்தது. 

Schools should not open until further orders... Chief Educational Officer Nellai District tvk
Author
First Published Dec 22, 2023, 10:45 AM IST

நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், ஏரி, குளங்கள் உடைப்பால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால், பொதுமக்கள் உணவு இல்லாமல் எங்கும் செல்ல முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். மழை குறைந்ததை அடுத்து பல்வேறு இடங்களில் வெள்ளம் வடிந்து மெல்ல மெல்ல நெல்லை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், இன்னும் சில இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்து வருகிறது.  பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஓரிரு இடங்களில் மழை பெய்ததை அடுத்து மறுஉத்தரவு வரும் வரை நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையில்;- நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வரச் சொல்லியோ, சிறப்பு வகுப்புகள் சொல்லியோ மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது.  மேலும், அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios