தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கோடை வெயிலின் வெப்பத்தை போக்கும் வகையில் மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி, சேலம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 36-45 கீமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தென்காசியில் 4 சென்டி மீட்டர் மழையும், ஆயக்குடியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். இவ்வாறு வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.