நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே இருக்கிறது குமாரசாமிபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மாதவன்துரை(35). இவரது மனைவி ராஜேஸ்வரி(30). இந்த தம்பதியினருக்கு பாரத்ராஜா என்கிற 5 வயது மகன் இருந்துள்ளார். தற்போது ராஜேஸ்வரி கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் முக்கூடலில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மாதவன்துரை சென்றுள்ளார்.

பின் மாலையில் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு கிளம்பி மூன்று பேரும் வந்துகொண்டிருந்தனர். முக்கூடல் அருகே இருக்கும் பாப்பாகுடி சாலையில் வந்தபோது எதிரே கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்த மாதவன்துரை அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மாதவன்துரையும் பாரத்ராஜாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். ராஜேஸ்வரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அவர் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறார். நெல்லையில் இருக்கும் ஏ.டி.எம் களில் பணம் நிரப்ப சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

விபத்தில் கர்ப்பிணி பெண் கணவர் மற்றும் மகனுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.