Asianet News TamilAsianet News Tamil

"அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!" அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் கலெக்டர் வரை பெருமிதம்

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகளின் போது தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

Pottery with Tamil script Find at Thulukkarpatti Excavation
Author
First Published Jul 4, 2023, 5:01 PM IST

தமிழர்களின் பண்டைய வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து தமிழக தொல்லியல்துறை சார்பில் 7 இடங்களில் விரிவான அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதில் வற்றாத ஜீவநதி என அழைக்கப்படும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் குறித்து உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் திருநெல்வேலியில் அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

36 ஏக்கர் பரப்பளவில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த அகழாய்வின் போது புலி என்ற தமிழ் வார்த்தை பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒருவார இடைவெளியில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. குவிர(ன்), தி ஈ ய மற்றும் தி ச என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மண் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Pottery with Tamil script Find at Thulukkarpatti Excavation

இங்கு நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளில் 1,100-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்தப் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள தமிழி எழுத்து ஓடுகள் திருநெல்வேலி நம்பியாற்று படுகையில் எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், "அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!" திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில்  நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு பல நல்ல சான்றுகள் கிடைத்துள்ளன” என்று கூறியுள்ளார்.

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios