கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரி வாசலில் நின்று கொண்டு வாலிபர்கள் சிலர் அங்கு வருகின்ற மாணவிகளிடம் பேச்சு கொடுத்துள்ளனர் . அதை அந்த மாணவிகளுக்கு தெரியாமல் படம் பிடித்து  "அதை டிக் டாக் பண்ணுங்க ..அழகா இருக்கீங்க " என்கிற தலைப்பில் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றனர் .

அதை பார்த்த மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் . சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு மாணவிகளின் பெற்றோர் இதை கொண்டு சென்றனர் . உடனே கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அந்த வாலிபர்கள் மீது நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது .

புகாரின் அடிப்படையில் அந்த நபர்களை பிடித்து காவல்துறை விசாரணை செய்தது . அவர்கள் தனியாக யூடியூப் சேனல் நடத்துவதாகவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை தான் என்று கூறியுள்ளனர் . எனினும் பெண்கள் கல்லூரியில் இவ்வாறு நடந்தது தவறு தான் கூறிய அவர்கள் , அந்த காணொளியை நீக்கிவிடுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர் . இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்திருக்கின்றனர் .

அந்த வாலிபர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் அவர்களை எச்சரித்து அனுப்புமாறு காவல்துறையிடம் கூறியிருக்கிறது . இதனால் காவல்துறை அந்த வாலிபர்களை கடுமையாக எச்சரித்ததோடு மீண்டும் இவ்வாறு நடந்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளனர் .

அப்போது அங்கிருந்த மாணவியின் தந்தை ஒருவர் "உன் வீட்டு பெண்களை இப்படி ஒருவன் கிண்டல் செய்து அதை யூடியூபில் போட்டால் நீங்கள் அதை அருமையாக இருக்கு .. என் சகோதரியை அருமையாக கிண்டல் செய்து வெளியிட்டு இருக்கிறார்களே என லைக் போடுவியா"?? என்றார் .  அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாலிபர்கள் வெட்கி தலை குனிந்தனர்.

இது போன்ற பிராங்க் ஷோகளால் பலரும் பாதிக்கப்படுகின்றனர் . எங்காவது அவசரத்தில் சென்று கொண்டிருக்கும் போது இதுபோன்ற நிகழ்வுககளை நடத்துபவர்கள் இடையில் வந்து தொல்லை செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர் .  தங்களின் டி ஆர் பி  ரேடிங்க்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இனியாவது அதன் விபரீதத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் .