நெல்லையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜெயசூர்யா (வயது23). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் போலீஸ்காரராக பணி புரிந்தார். திருமணத்திற்கு பின் தற்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், கணவர் முத்துக்குமார் தேர்தல் பணிக்காக வெளியில் சென்றிருந்த நேரத்தில், குடும்பத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது என தெரிய வருகிறது. இதனையடுத்து, நேற்றிரவு கணவர் அறையில் தூங்கச் சென்ற மனைவி ஜெயசூர்யா அதிகாலையில் வெகுநேரமாகியும் எழுந்திருக்காத காரணத்தினால் உறவினர்கள் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஜெயசூர்யா இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயசூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஜெயசூர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் கூறினர். திருமணமாகி 4 மாதங்களே ஆகின்ற நிலையில், ஜெயசூர்யாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.