எங்கள் பூர்வீக நிலத்தை மீட்டு தாருங்கள்; நெல்லை - திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் குதித்த மக்களால் பரபரப
திருநெல்வேலியில் தங்களது பூர்வீக நிலத்தை ரியல் எஜ்டேட் அதிபர்கள் சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க முயல்வதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
திருநெல்வேலி மாநகராட்சியில் VM சத்திரம் பகுதி அடுத்து உள்ளது ஆரோக்கியநாதபுரம். 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் கடந்த 2007ம் ஆண்டு போலி பட்டா மூலம் அபகரித்ததாகக் கூறி இதுவரை பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தந்த நேரங்களில் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதே வழக்கமாக இருந்துள்ளது.
தங்களின் விவசாய நிலங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் கல்லறை தோட்டம் என இத்தனை ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலங்கள் அனைத்தும் திடீரென தனி நபர்கள் போலி பட்டா மூலம் அபகரித்து அதனை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாற்றி வருவதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியிருக்கிறோம். ஆனால் அதில் சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இந்த இடத்தின் சொத்து மதிப்பும் பல கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்நிலையில் திடீரென கடந்த மூன்று நாட்களாக தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல விடாமல் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் குண்டர்கள் மூலம் தடுப்பதாகவும், இவர்கள் மீது புகார் அளித்தால் அவர்களுக்கு ஆதரவாகவே காவல்துறை அதிகாரிகளும் செயல்படுவதாகவும் கூறி தங்களுடைய நிலத்தை தங்களுக்கே திருப்பி மீட்டு தர வேண்டும் எனக் கூறி திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் ஆரோக்கியநாத புரத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
200 வருடங்களுக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் எங்களின் நிலத்தை 2007ம் ஆண்டுக்கு பிறகு போலி பட்டா மூலம் அபகரிக்க நினைக்கும் தனிநபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த எங்களது பூர்வீக நிலத்தை சட்டப்படி மீட்டு தர வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.