தமிழகத்தின் தென் எல்லையில் மிகப்பெரிய மாவட்டமாக திகழ்ந்து வந்த திருநெல்வேலி தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு 33 வது மாவட்டமாக தென்காசி இன்று உருவாகியது. ஐவகை நிலங்களும் அமையப்பெற்ற நெல்லை மாவட்டதில் இருந்து பிரிந்திருக்கும் தென்காசி, தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்திருக்கிறது.

1985 ம் ஆண்டில் இருந்து சுமார் 33 ஆண்டுகளுக்கும் மேலாக தென்காசி தனி மாவட்டத்திற்கான கோரிக்கைகள் அப்பகுதி மக்களால் வைக்கப்பட்டிருந்தது. இங்கு தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் 'தென்காசியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க பாடுபடுவேன்' என்று வரியை தவறாமல் உபயோகப்படுத்துவார்கள். இதுகுறித்து சட்டமன்றத்திலும் பல்வேறு முறை கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் 'பரிசீலிக்கப்படும்' என்ற பதிலே வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நிர்வாக வசதிக்காக தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரிக்க தொடங்கியது. அதன்படி தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டத்தை அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது. இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை வருடங்களாக முக்கிய அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட தலைநகரான திருநெல்வேலிக்கு இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது அத்தனை வசதிகளும் தென்காசிக்கே வரவிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் உச்சபட்ச சிறப்பாக தென்றல் தவழும் குற்றாலம் அமைத்திருக்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, பாலருவி என அருவிகளின் நகரமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் குற்றாலத்தை வரமாக பெற்றிருக்கிறது தென்காசி மாவட்டம். ஒவ்வொரு வருடமும் சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிய, புதிய தென்காசி மாவட்டத்தின் வருவாய்க்கு அடித்தளமாக விளங்கப்போகிறது குற்றாலம். இயற்கை அன்னையின் மடியில் தவழும் தென்காசி மாவட்டத்தில் கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிய நயினார், ராமநதி என பெரிய நீர் தேக்கங்கள் அமையப்பெற்று விவசாயத்தையும் குடிநீர்  தேவையையும் பூர்த்தி செய்ய இருக்கிறது. 

தென்காசி மாவட்டத்தின் சிகரமாக காசிவிஸ்வநாதர் ஆலய கோபுரம் அமைந்துள்ளது. இலஞ்சி குமாரசாமி ஆலயம், பண்பொழி முருகன் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி ஆலயம், இலத்தூர் சனிபகவான் கோவில், பொட்டல்புதூர் தர்கா, புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் தேவாலயம் என ஆன்மீக தலங்களில் நெல்லை மாவட்டத்திற்கு இணையாக இருக்கும் அளவில் தென்காசி பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அந்நியர்களை எதிர்த்து முதன்முதலாக கூக்குரலிட்ட மாமன்னர் புலித்தேவர் பிறந்த நெற்கட்டும் சேவல் தென்காசியில் அமைந்திருப்பது இம்மாவட்டத்தின் தனிச்சிறப்பு. மேலும் ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் பிறந்ததும் இங்கிருக்கும் செங்கோட்டையில் தான். 

இப்படி பல்வேறு சிறப்புகளை தென்காசி மாவட்டம் கொண்டிருந்தாலும் இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்த திருநெல்வேலியில் இருந்து பிரிந்தது அம்மக்களுக்கு நீங்காத வலியை தான் தந்திருக்கிறது. நெல்லை மாவட்ட மக்களுக்கும் இந்த பிரிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது. ஆனாலும் நெல்லையில் இருந்து தூத்துக்குடியை பிரித்து கொடுத்து தற்போது அது தொழில் நகரமாக சிறந்து விளங்குவது போல, தென்காசியும் தனது வளர்ச்சியின் பாதையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லட்டும் என நெல்லை மக்கள் ஆறுதல் அடைகின்றனர். தொழில் நகரமாக விளங்குவதனால் தூத்துக்குடியை நெல்லையின் மூத்த மகனாகவும் இயற்கை எழில் கொஞ்சுவதனால் தென்காசியை நெல்லையின் மகளாகவும் கருதுவதாக சமூக வலைத்தளங்களில் அம்மாவட்ட மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கும் தென்காசி மாவட்டமும் அதன் மக்களும் கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் சிறந்து விளங்க அரசு தேவையான முயற்சிகளை செய்யும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கின்றனர்.