வெள்ள பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்டாவது நிதி வழங்குவார்கள் என நம்புகிறோம் - உதயநிதி கருத்து
தென்மாவட்டங்களில் மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நேரில் பார்வையிடவுள்ள நிலையில், பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்டாவது நிதி வழங்குவார்கள் என நம்புவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 16 பேரில் 11 நபர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்கட்டமாக உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். 10 நாட்களாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் களத்தில் பணி செய்கிறார்கள். தற்போது அரசியல் வேண்டாம். குளம் தூர் வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் காரணமாக பேசுகிறார். வரலாறு காணாத நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்ன பணிகள் நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் இந்த பிரச்சினையை புரிந்து கொள்வார்கள். மலை கிராமமான மாஞ்சோலைக்கு பேருந்து போக்குவரத்து துவங்காத நிலையில் மக்கள் இலவசமாக வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பேரிடர் இல்லை என கூறிய நிதி அமைச்சர் பேரிடர் பாதிப்புகளை பார்வையிட நாளை தூத்துக்குடி வருகிறார். முறையாக பார்வையிட்டு தகுந்த ஆய்வு செய்து நிதி வழங்குவார் என நம்புகிறோம். பாரதப் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமை குறித்து பேசி உள்ளார். முதலமைச்சரும் நிலைமையை எடுத்துக்கூறி கூடுதல் நிதி கோரி உள்ளார். பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாளை தூத்துக்குடி வரக்கூடிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நிதி வழங்குவார் என நினைக்கிறோம் என்றார்.