செல்பி மோகம் உயிரை எடுக்கும் கொடூரம்.. அதிகரிக்கும் மரணங்கள்!!
அணையில் நின்று செல்பி எடுக்க முயன்ற வாலிபர் நிலை தடுமாறி தடாகத்தில் விழுந்து பலியானார்.
விபரீதமான முறையில் செல்பி எடுக்க முயன்று பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அபாயகரமான பகுதிகளில் நின்று செல்பி எடுக்க நினைப்பவர்கள் அதனால் நிகழும் பின்விளைவுகளை நினைத்து பார்ப்பதில்லை. அதன்காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேக்கரை அருகே இருக்கிறது அடவிநயினார் அணை. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த அணை முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதை பார்ப்பதற்காக சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் பெருமளவில் வருகின்றனர். அப்படி வருபவர்கள் தங்கள் அலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கிறார்கள்.
இந்த நிலையில் வடகரை மதரசா தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரது மகன் ஜாகிர் ஹுசைன்(18 ) அடவிநயினார் அணையை பார்வையிட வந்துள்ளார். அணையின் மேற்பகுதியில் இருந்து ரசித்த அவர் செல்பி எடுக்க நினைத்திருக்கிறார்.
இதனால் 10 அடி உயரம் இருக்கும் அணையின் சுவரில் ஏறி நின்று தனது பின்னால் அணை முழுவதும் தெரியும்படி செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் சுவரில் இருந்து தவறி தண்ணீர் பாய்ந்தோடும் தடாகத்தில் விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜாகிர் ஹுசைன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அச்சன்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்பி மோகத்தால் வாலிபர் ஒருவர் அணையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.