நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உதயகுமார்(48). இவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா லட்சுமி என்ற மகளும் முத்தையா முரளிதரன் என்ற மகனும் உள்ளனர். எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலரான உதயகுமார் பெங்களூரில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல உதயகுமார் பணியில் இருந்தார். அப்போது இரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு சக காவலர்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரற்ற உதயகுமாரின் உடலை கண்டு கதறி துடித்தனர். இதையடுத்து உதயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான பணகுடிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக இன்று காலையில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கண்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

image

தொடர்ந்து அங்கிருக்கும் மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உதய குமாரின் உடலை பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரூ பிரதீப் உள்ளிட்ட காவலர்கள் சுமந்து சென்றனர். உதயகுமாரின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தி அரசு மரியாதை செலுத்தினர். பின் தேசிய கொடி உதயகுமாரின் மகனிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.