திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பேபிகலா(18). இவர் வசிக்கும் பகுதியில் இன்பசத்யா(19 ) என்பவரும் வசிக்கிறார். இன்ப சத்யா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பேபிகலாவிற்கும் இன்பசத்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களாக பழகிய அவர்கள் இருவரும்  நாளடைவில் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
 
இதனிடையே குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் பட்டப்படிப்பு முடிக்காத நிலையில் அவருக்கு திருமணம் செய்ய கூடாது என்றும் காதலனிடம் இருந்து அவரை மீட்டு தருமாறு குறிப்பிட்டிருந்தார்.
 
விசாரணை நடத்திய நீதிபதிகளிடம் பேபிகலா, படிப்பை தொடர விருப்பம் இருந்தாலும் தந்தையுடன் போக மாட்டேன் என்று தெரிவித்தார்.
 
இதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள் வைத்யநாதன், ஆனந்த் சர்மா பேபிகலா 18 வயது பூர்த்தி அடைந்தவர் என்பதால் திருமணம் குறித்து முடிவெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவரது காதலன் இன்பசத்யாவிற்கு 19 வயது தான் ஆகுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் சட்டப்படி ஆண்கள் 21 வயதில் தான் திருமணம் செய்ய முடியும் என்றனர்.
 
2 ஆண்டுகளுக்கு பேபிகலா விடுதியில் தங்கி படிப்பை தொடர வேண்டும் என்றும் அதற்கு பிறகு திருமணம் குறித்து யோசியுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவரது தந்தை விரும்பும் பட்சத்தில் திருமணம் குறித்து இன்பசத்யாவின் பெற்றோருடன் பேசி முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.