நெல்லை அருகே குடும்ப தகராறில் மகன்கள் கண்முன்னே மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னதம்பி நாடார்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அனந்த பெருமாள் (55). இவரது மனைவி பன்னீர் செல்வம் (50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டு ஊனமுற்று நடக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். 
 

இந்நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கணவர் நீ தான் செய்வினை செய்து என் குடும்பத்தை கெடுத்துவிட்டாய் என கூறி மனைவியை திட்டியுள்ளார். மேலும் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், உடல் கருகி மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், அனந்த பெருமாளுக்கு தீ காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அனந்த பெருமாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.