தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வந்தது. மாநிலத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னையில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியது.

இதனிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் வெகுவாக ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் குறைந்தது. இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாக இருக்கும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.