தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மாநிலத்தின் பெரும்பலான பகுதிகளால் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் பயணிக்கமுடியாத அளவிற்கு மழை நீர் தேங்கி இருக்கிறது.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் காரையார் அணை நிரம்பி தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரண்டு நாட்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. 14 இடங்களில் மிக கனமழையும் 53 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.