ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்;- தென் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்குப் புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் பாம்பன் பாலத்துக்குக் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்குக் கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று இரவில் இலங்கையைக் கடக்கக் கூடும். நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
இதன் காரணமாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 2, 2020, 5:13 PM IST