3 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து மாநிலத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னையில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியது.
இந்தநிலையில் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருப்பதால் கடலில் காற்று பலமாக வீசும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.