பேய்மழையுடன் கரைபுரண்டு ஓடும் வரலாறு காணாத வெள்ளம்..! அசராமல் தாங்கும் தாமிரபரணி..!

காரையாறில் இருக்கும் சொரிமுத்தையனார் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது. அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தம், தலையணை ஆகிய பகுதிகள் கண்களுக்கு தெரியாத அளவிற்கு வெள்ள நீரால் நிரம்பியிருக்கிறது. 

heavy flood in tamirabarani

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

heavy flood in tamirabarani

இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் பாபநாசம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது கரையாறு நீர்த்தேக்கம். 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 2016 ம் ஆண்டு நிரம்பிய காரையாறு அணை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது.

heavy flood in tamirabarani

அணை நிரம்பியுள்ள நிலையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் அணையில் இருந்து 6000 கன அடிக்கு மேலாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காரையாறில் இருக்கும் சொரிமுத்தையனார் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.

heavy flood in tamirabarani

அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தம், தலையணை ஆகிய பகுதிகள் கண்களுக்கு தெரியாத அளவிற்கு வெள்ள நீரால் நிரம்பியிருக்கிறது. தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் அம்பை, சேரன்மகாதேவி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் ஆற்றின் மேலிருக்கும் பாலத்தை தொட்டுச் செல்லும் அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

heavy flood in tamirabarani

பொதுமக்கள் யாரும் ஆறுகளுக்கு குளிப்பதற்கோ, வெள்ளத்தை பார்ப்பதற்கோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த வரும் இரண்டு தினங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவை உன்னிப்பாக கவனித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மாவட்டத்தின் மற்ற முக்கிய அணைகளான சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவையும் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios