ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்! ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை.!
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரசட்டம் சட்டப்பேரவையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் காலாவதியாகிவிட்டது.
நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியால் 10 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரசட்டம் சட்டப்பேரவையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் காலாவதியாகிவிட்டது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசும் உடனடியாக பதில் அனுப்பியது. ஆனாலும் அதன்பிறகும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ்(34). பட்டதாரி. இவருக்கு நிரந்தர வேலை இல்லாததால் அவ்வப்போது கூப்பிட்ட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிறு தொகையை வென்றுள்ளார்.
இதனையடுத்து, பெரிய தொகையை வைத்து விளையாடிய போது மொத்த பணத்தையும் இழந்துள்ளார். விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று பெற்றோருக்கு தெரியாமல் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் பெற்று விளையாடியுள்ளார். அந்த பணத்தையும் இழந்துள்ளார். இவர் இழந்த பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.