தடையை நீக்கிய வனத்துறை... 9 வருஷம் கழிச்சு பாணத் தீர்த்தம் அருவிக்கு ஜீப்பில் செல்ல அனுமதி!
வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 18) முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வனத்துறை ஏற்பாடு செய்யும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இயக்குநர் செண்பகப்ரியா கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பாபநாசத்திற்கு அருகே உள்ள பாணத் தீர்த்தம் அருவியை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று பார்வையிடலாம் என்று வனத்துறை கூறியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கான அனுமதி வழங்கி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்ரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காரையாறு அணையில் மீண்டும் படகுப் போக்குவரத்தைத் தொடங்கவும், பாண தீர்த்த அருவிக்குச் செல்ல அனுமதி வழங்கவும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின், சுற்றுலாப் பயணிகள் வனத்துறை வாகனத்தில் பாணத்தீர்த்தம் அருவியைப் பார்வையிட செல்லலாம் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இயக்குநர் செண்பகப்ரியா அறிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, காரையாறு அணைக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். வனத்துறை வாகனத்தில் பாணத்தீர்த்தம் அருவியைப் பார்த்து வருவதற்கு ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 18) முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வனத்துறை ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "18.09.2023-ம் தேதி முதல் பாணதீர்த்தம் அருவியினை சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 500/- வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு காலை 8.00 மணி to மாலை 4.00 வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்படுப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன், அம்பாசமுத்திரம் கோட்டம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டபோது, சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குக் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. காரையாறு அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. பாணத்தீர்த்த அருவியில் குளிப்பதற்கு மட்டுமின்றி பார்வையிடவும் முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. சுற்றுலாத் தலங்கள் நிறைந்த அம்பாசமுத்திரம் கோட்டத்தில் மணிமுத்தாறு அணை, காரையாறு அணை, சேர்வலாறு அணை ஆகிய அணைக்கட்டுகள் உள்ளன. அகஸ்தியர் அருவி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவையும் இந்தப் பகுதியில் தான் உள்ளன.