தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் பாபநாசம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது காரையாறு நீர்த்தேக்கம். 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 2016 ம் ஆண்டு நிரம்பிய காரையாறு அணை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1755 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேறும் நீருடன் காற்றாற்று தண்ணீரும் சேர்ந்து செல்வதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ, ஆற்று வெள்ளத்தை பார்ப்பதற்கோ செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று மாவட்டத்தின் மற்ற பிரதான அணைகளான மணிமுத்தாறு, சேர்வலார் ஆகியவையும் வேகமாக நிரம்பி வருகின்றன.