நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் உடன் பணியாற்றும் திருமணமாகாத பெண் காவலரிடம் தகாத முறையில் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் உடன் பணியாற்றும் திருமணமாகாத பெண் காவலரிடம், நீ தனியாக தங்கி இருக்கும் போலீஸ் குடியிருப்பின் அருகேயுள்ள வீடுகளில் யாரும் இல்லை. எல்லோரும் வெளியூர் சென்றுள்ளனர். எனவே நீ மட்டும் தான் அந்த பகுதியில் தனியாக இருக்கிறாய். நான் இரவில் உன் வீட்டிற்கு வருகிறேன். நீ கதவை மட்டும் திறந்து வை என கூறுகிறார்.

இதற்கு அந்த பெண் காவலர் எஸ்ஐயிடம் ‘வேண்டாம் சார், சாரி, சார் எனக்கு பயமாக இருக்கிறது. நான் அந்த மாதிரி பெண் இல்லை’ என்று கூறுகிறார். ஆனால் அதற்கு அவர், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். 10 நிமிடத்தில் அல்லது அரை மணி நேரத்தில் வெளியே சென்று விடுவேன். சத்தியமாக ஒன்றும் நடக்காது, என்னை நம்பு. இதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்கிறார். இதற்கு அவர் தொடர்ந்து மறுக்கிறார். ஆனால் எஸ்ஐ விடாப்பிடியாக தொடர்ந்து எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன் மறுக்காதே என கட்டாயப்படுத்துகிறார்.  போலீஸ் ஸ்டேஷனில் வேறு யாரும் இல்லை. நான் மட்டும் தான் உள்ளேன். அதனால் வெளியே சென்று வருவது போன்று உன் வீட்டிற்கு வருகிறேன் என்கிறார். பெண் காவலர் எவ்வளவோ சமாளித்தும் எஸ்ஐ விடுவதாக இல்லை.

கடைசியில் அந்த பெண் காவலர் அழாத குறையாக, சார் சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்கிறார். ஆனால், காவலர் வேறு யாரிடமும் இதுபற்றி வாய்திறக்கக்கூடாது என மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதற்கு பெண் காவலர்  ‘சத்தியமா நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என கெஞ்சுகிறார். இத்துடன் அந்த உரையாடல் முடிகிறது. இதனிடையே, காவல் ஆய்வாளரும், பெண் காவலரும் 4 நிமிடம் பேசிய செல்போன் உரையாடல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முதல் வேகமாக பரவி வருகிறது.