திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் பன்னீர் செல்வம் என்பவர் கடந்த சில வருடங்களாக காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல காவல் பணிக்கு வந்துள்ளார். அப்போது சோமசுந்தரம் வீட்டில் இல்லை. அதனால் பன்னீர் செல்வம் மட்டும் இரவு தனியாக இருந்துள்ளார். அவருடன் அவர் வளர்த்து வந்த நாய் ஒன்றும் இருந்துள்ளது.

இந்தநிலையில் இரவு பன்னீர் செல்வத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் உதவிக்கு இல்லாததால் அவர் உயிரிழந்திருக்கிறார். இன்று காலையில் அந்த வழியாக சென்ற இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பன்னீர் செல்வத்தின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் வளர்த்த நாய் யாரையும் உடல் அருகே விடாமல் சுற்றி சுற்றி வந்து குரைத்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர். 

பின் காவல்துறையினர் கயிறு மூலம் நாயை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நாயின் கழுத்தில் கயிறு இறுகியதில் அது பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து பன்னீர் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என்பது உறுதியானது. நாயின் உடலும் மீட்கப்பட்டு காவல்துறை மூலமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.