குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது .

கடந்த 3  நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.  மெயின் அருவி , ஐந்து அருவி , பழைய குற்றாலம் ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள்  கடந்த 3 நாட்களாக அங்கு குளிக்க தடை விதிக்க பட்டிருந்தது. எனினும் புலியருவி, சிற்றருவி போன்ற பகுதிகளில் குளிக்க அனுமதிக்க பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. 

இந்த நிலையில் நீர்வரத்து நேற்று மதியத்திற்கு மேல் குறைந்ததால் தடைவிதிக்க பட்டிருந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்க பட்டனர் மெயின் அருவியில் மட்டும் சிறிது சிறிதாக அனுப்பி குளிக்க அனுமதித்தனர். குற்றாலத்தில் இந்த வருடம் சீசன் மிக தாமதமாக தொடங்கினாலும் தற்போது பெய்து வரும் கன மழையால் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குற்றாலம் நோக்கி  படையெடுக்க தொடங்கி உள்ளனர். 

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான கரையார் , மணிமுத்தாறு ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.