உயிருக்கு ஆபத்து என்று புகார்.. இப்படி ஆயிடுச்சு.. ஜெயக்குமார் மரண விவகாரம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவு
ஏப்ரல் 30-ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தும், அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவாகவே, திரு.ஜெயக்குமார் அவர்களின் மரணம் நடந்தேறியுள்ளது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் எல் முருகன்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மரணம் அடைந்தது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
‘போலி திராவிட மாடல்’ ஆட்சியின் அவலங்களுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, தங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் இரையாகி வருவது தொடர் கதையாகியுள்ளது. ஒரு தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் புகார் தந்தும் அவரின் உயிரை காப்பாற்ற வக்கில்லாத தமிழக அரசின் கீழ் சாதாரண பொது மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.
ஏப்ரல் 30-ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தும், அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவாகவே, திரு.ஜெயக்குமார் அவர்களின் மரணம் நடந்தேறியுள்ளது.
மேலும், ஜெயக்குமார் அவர்களின் மரணத்தின் பின்னணியையும், சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளையும் விரைந்து கண்டறிய தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இந்த சமயத்தில் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..