ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த கல்லூரி மாணவர்..! கால் துண்டான பரிதாபம்..!
ராஜபாளையம் ரயில்நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த இளைஞரின் கால் துண்டாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கவியரசு(20). சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 2 வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பருவ தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுதியும் அடைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக மாணவர்கள் ஊருக்கு கிளம்பி சென்றுள்ளனர். கவியரசும் தனது நண்பர்களுடன் ஊருக்கு கிளம்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவு தென்காசி செல்லும் பொதிகை விரைவு வண்டியில் அவர் பயணம் செய்தார். நேற்று காலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்.
கவியரசு ரயிலின் படிக்கட்டு அருகே நின்றிருந்தார். பின் ரயில் கிளம்பியதும் ஓடியவாரே படியில் ஏறியபோது கால் வழுக்கி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கினார். இதில் அவரது வலது கால் துண்டானது. உடனடியாக அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ரத்தவெள்ளத்தில் துடித்த கவியரசு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரயிலில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவரின் கால் துண்டான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.