திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியைச்  சேர்ந்தவர் வீரபெருமாள். இவருடைய மகள் வனிதா (வயது 20). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும் பாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்த இசக்கி மகன் சங்கரநயினார் (21) என்பவரும் நண்பர்கள் .

இவர்கள் இருவரும் நேற்று மாலை நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அருகன்குளம் அருகே இருக்கும் பைபாஸ் ரோட்டில் உள்ள பாலத்தின் கீழே இறங்கி ஆற்றில் குளித்தனர். அப்போது வனிதா ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார் . ஆற்றின் ஆழத்தில் தத்தளித்த அவர் கரைக்கு வர முயற்சி செய்திருக்கிறார் . ஆனால் நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரால் மீண்டு வரமுடியவில்லை .

வனிதா ஆழத்தில் சிக்கிக்கொண்டதை பார்த்த அவரது நண்பர் சங்கரநயினார் , வனிதாவை காப்பாற்ற சென்றார் . ஆனால் அவரும் நீரில் சிக்கி மூழ்கத்  தொடங்கினார்.

இரண்டு பேரும் தண்ணீரில் சிக்கிக்கொண்டதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர் . ஆனால் அதற்குள் வனிதாவும்  சங்கரநயினாரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர் .

ஆற்றுக்கு குளிக்க வந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் . தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி வனிதா, சங்கரநயினார் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இருவரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர் .

இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து ஆற்றில் மூழ்கி பலியாகி உள்ளதால் அவர்கள் இருவரும் காதல் ஜோடியா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் .