ஆலங்குளம் அருகே திருமண விருந்துக்கு மட்டன் வாங்க சென்றபோது லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் முருகன் (52), நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு அனுசுபா, தங்கம் என இரு மகள்களும், மகேஷ் என்ற மகனும் உள்ளனர். மகேஷ் பாளையில் தனியார் வங்கியில் வேலைபார்த்து வந்தார். மூத்த மகள் அனுசுபாவை சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த நிரஞ்சன்குமார்(28) திருமணம் செய்துள்ளார். இது காதல் திருமணம். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். 

2வது மகள் தங்கத்தை ஈரோட்டை சேர்ந்த ராஜசேகர்(35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இன்ஜினியரான இவர், அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் தனிக்கா(4). நேற்று முன்தினம் மகேசுக்கு கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மைத்துனர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிரஞ்சன்குமார், ராஜசேகர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்தனர். நேற்று முன்தினம் திருமணம் முடிந்த நிலையில், நேற்று உறவினர்களுக்கு கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதையடுத்து ஆலங்குளம் அருகே விலை குறைவாக இருக்குமென கூறி மட்டன் வாங்க நேற்று அதிகாலை ராஜசேகர் காரில் நிரஞ்சன்குமார், மாமனார் முருகன், குழந்தை தனிக்கா மற்றும் உறவினர் கேடிசி நகர் நடராஜன் (58) ஆகியோர் சென்றனர். காரை ராஜசேகர் ஓட்டினார். அப்போது ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத வதிமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரிக்குள் புகுந்தது. இதனால் காரின் முன்பகுதி லாரியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் முருகன், நிரஞ்சன்குமார், ராஜசேகர், நடராஜன், குழந்தை தனிகா ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு உடல்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.