நெருங்கும் ரமலான் பண்டிகை..! இஸ்லாமியர்களுக்கு அதிரடி உத்தரவு..!
தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ரமலான் பண்டிகை தொழுகையை பள்ளிவாசல் அல்லது திடல்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை வீடுகளிலேயே நிறைவேற்ற வேண்டும்
ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் கடந்த 3 மாத காலமாக ஆட்டிப்படைத்து வருகிறது. வேகமாக பரவி வரும் அந்நோயை கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், அலுவலகங்கள், சுற்றுலா இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உலகளவில் அனைத்தும் நிகழ்வுகளும் ரத்தாகி இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் இஸ்லாமிய மக்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு காலம் தொடங்கியது. கொரோனா பரவுதலை தடுக்க மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே நோன்பு வைக்கவும் தொழுகை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நோன்பின் இறுதி காலம் நெருங்கி வரும் 25ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து கொரோனா பரவுதல் தடுக்க கட்டுப்பாடுகள் தொடர்வதால் தமிழகத்தில் ரமலான் அன்றும் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே பெருநாள் தொழுகை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று ஆபத்து காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ரமலான் பண்டிகை தொழுகையை பள்ளிவாசல் அல்லது திடல்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.