நெல்லையில் அத்துமீறும் ரௌடிகள்; கலக்கத்தில் வியாபாரிகள்
நெல்லை டவுன் பகுதியில் உள்ள பலகார கடை ஒன்றில் மூன்றடி வாளை வைத்து சூறையாடிய மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அப்பகுதியில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பலகாரம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை அடைக்கும் நேரத்தில் சாலியர் தெரு பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் சுமார் மூன்று அடி உயரம் கொண்ட வாளை வைத்து தங்கராஜ் கடையில் முன் பகுதியில் இருந்த பலகாரங்கள் வைத்திருந்த பாட்டில் மற்றும் கண்ணாடி ஷோகேசுகளை சரமாரியாக அடித்து நொறுக்கி சூறையாடினார்.
மேலும் அங்கிருந்த ஊழியர்களையும் வாளால் மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் கடையில் இருந்து தப்பி வெளியே வந்து நெல்லை டவுன் காவல் துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை அடைக்கும் நேரத்தில் சாலையில் நடந்து சென்ற மர்ம நபர் ஒருவர் கொண்டு கடையில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டிஜிபி சைலேந்திர பாபு ரௌடிகளை ஒடுக்க காவல் துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
டிஜிபியின் உத்தரவால் ரௌடிகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியான நெல்லை டவுன் பகுதியிலேயே ரௌடி ஒருவர் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.