பைக் மீது பயங்கரமாக மோதிய கார்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப பலி..!
தென்காசி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
தென்காசி மாவட்டம் பணவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு. இவரது மகன் அய்யப்பன்(34). இவருக்கும் செல்வி(30) என்கிற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கேரளாவில் இரும்புக்கடை வைத்து நடத்தி வரும் அய்யப்பன் சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். புதியதாக கட்டியிருக்கும் வீட்டில் நாளை மறுநாள் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வந்தார். கிரகப்பிரவேசதிற்கு பத்திரிகை அடித்து உறவினர்களை விழாவிற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்துள்ளார். நேற்று மாலையில் தனது தங்கை ஜோதி(32) மற்றும் மனைவியை அழைத்துக்கொண்டு உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்துள்ளார். பின்னர் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
பனவடலிசத்திரம் அருகே இருக்கும் பசும்பொன் நகர் அருகே வந்த போது கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தகவலறிந்து வந்த உறவினர்கள் மூன்று பேரின் உடல்களையும் பார்த்து கதறி துடித்தனர். விபத்தை உண்டாக்கிய கார் ஓட்டுனரை கைது செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடை பட்டது.
விரைந்து வந்த காவலர்கள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய கார் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வேறொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக அவர் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.