1000 ரூபாய்க்காக ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய கும்பல்; கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் அறுவடை இயந்திர ஓட்டுநரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் குமார். அறுவடை இயந்திர ஓட்டுநரான இவர் நேற்று முன் தினம் நள்ளிரவு, கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் ஜான் செல்வராஜ் நகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை அரிவாளால் தாக்கி, அவரிடம் ரூ.1000 ரொக்க பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
அப்போது குமார் கூச்சலிட்டதால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குமாரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்; கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் திருடிய மர்ம நபர்கள்
இது தொடர்பாக குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மருதமுத்து நகரைச் சேர்ந்த விஜய் (வயது 24) மற்றும் மேலக்காவிரியைச் சேர்ந்த சாதிக் பாட்சா (20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.