தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கிய டெங்கு பீதி..! குழந்தைகளிடம் வேகமாக பரவும் நிலையில் பெற்றோர் அச்சம்..!
டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாக காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அதை தொடர்ந்து கோவையில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். தொடர்ந்து ஆங்காங்கே மர்ம காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதுவரையிலும் 7 பேர் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாக காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பருவ மழை இன்னும் தொடங்காத நிலையில் இவ்வளவு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மழை தொடங்கியதும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதே போல நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தினமும் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகள் தான் இதனால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 34 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 22 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோக மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினமும் வெளிநோயாளிகளாக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் மர்ம காய்ச்சலுக்கு தினமும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவுவதின் தீவிரத்தை குறைக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.