தமிழக அரசின் சீரமைப்பு பணிகள்: 48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழக அரசின் சீரமைப்பு பணிகள் காரணமாக பார்த்திபனூர் மதகணை கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் மதகணை முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வைகை ஆறு செல்கிறது. கடந்த 1975ஆம் ஆண்டு வைகை ஆற்றின் குறுக்கே கலைஞர் கருணாநிதியால் மதகு அணை கட்டப்பட்டது. இந்த பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள இடது பிரதான கால்வாய் மூலம் 87 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகிறது.
ஆனால், இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.52.50 கோடி மதிப்பீட்டில் புதர் மண்டிக்கிடந்த இந்த கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.
மத்தியப்பிரதேச தேர்தல்: எங்களுக்குத்தான் வெற்றி - அடித்துச் சொல்லும் கமல்நாத், சவுகான்!
அதன்படி, வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டதால், வைகை நீர் தங்குதடையின்றி செல்கிறது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகள், ஆறு, குளங்கள் நிரம்பி வருகிறது. எனவே, மாநிலம் முழுவதும் பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது, அதன்படி, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், 48 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திபனூர் மதகணையில் தண்ணீர் நிரம்பி, கால்வாய்களில் நீர் தங்கு தடையின்றி செல்கிறது.
இதனால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.